"பயம் "
"எனக்குள் எப்பொழுதும் பயம் இருக்கும் அல்ல அல்ல பயம் இருந்துகொண்டே இருந்தது.
சிறிய அடைக்கப்பட்ட அறையிலோ அல்லது லிஃப்டிலோ அல்ல வாகனத்திலோ செல்லும் போது மூச்சு திணறுகிறது என்ற பயத்தில் இருப்பேன்.
காலை 6 மணி ...ஒரு முறை சிறிய வாகனம் ஆனால் வசதியான வாகனம் அதில் சென்று கொண்டிருந்தேன்.ஜன்னல்கள் எல்லாம் மூடிய நிலையில் கர்டைன்கள் ஒளியை உள்ள வர விடாமல் தடுத்துக்கொண்டுருந்தன.
மிகவும் தவித்த நிலையில் பொறியில் சிக்கிய எலியைப் போல் இருந்தேன். அமைதியில்லாமல் ஒரு விதமான படபடப்பு என்னுள்.
சூரியன் உதிப்பதை பார்க்க சிலர் ஜன்னலை திறக்க ஒளி உள்ளே வர தொடங்கியது.சிறிது ஆசுவாசப்பட்டேன்.
அப்போது புரிந்தது. இந்த பிரச்சினையில் எனக்கு வழி தெரிந்தது, சிறிய அடைக்கப்பட்ட இடத்தில் இருக்க நேரிட்டால் அங்கே அழுத்தங்களை வெளியே கொட்ட சின்ன ஜன்னல் இருந்தால் போதும் என்று...
பயணம் தொடர்ந்தது.
செல்லும் வழியில் ஒரு கனரகப் பேருந்து கவிழ்ந்து கிடந்ததை பார்த்தேன். மறுபடியும் பயம் என்னை தொற்றிக் கொள்ள, நான் சென்ற வாகனத்தை சந்தேகிக்க ஆரம்பித்தேன். மறுபடியும் சஞ்சலம்.
ஒரு புள்ளியல் விவரம் சொல்வது என்னவென்றால் ஒரு வருடத்திற்கு பாம்பு கடித்து இறந்து போவோரின் எண்ணிக்கையைவிட வாகன விபத்தில் இறந்து போவோரின் எண்ணிக்கை அதிகம் என்று. பாம்பை மிரள்வோர் அதிகம் ஆனால் உந்துவண்டி ஓட்டத் தெரியாத, செல்லாதவர் மிகச் சிலரே.
இதற்காக என்ன உந்துவண்டியை தடைசெய்துவிட போகிறார்களா என்ன?. அப்படி செய்தால் அது புத்திசாலித்தனமா என்ன?
இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க பாம்பை பற்றிய பயம் எனக்குள் தோன்றியது.
பக்கத்தில் இருந்தவரிடம் அரசு மருத்துவமனை அருகில் எங்கு இருக்கிறது என்று கேட்டேன். ஏனென்றால் அங்கே தான் பாம்புகடிக்கான மருத்துவம் சரியாக பார்ப்பார்கள்.
அவர் தெரியாது தலையசைத்து, "ஏன்" என்று கேட்டார். சிரித்துக் கொண்டு ஒன்றுமில்லை என்பது போல் சமிஞைச் செய்தேன்.
எங்கோ படித்த ஞாபகம் உப்புச் சத்து உடம்பில் இல்லையென்றால் பாம்பு விஷத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது.
என் உடம்பில் எவ்வளவு உப்பு இருக்கிறது , எவ்வளவு சர்க்கரை இருக்கிறது யோசித்துக் கோண்டே வந்தேன்.
என் உடம்பு கூற்றை பற்றி யோசிக்க ஆரம்பிக்கையில் உப்பு, சர்க்கரை இதைப் பற்றி எல்லாம் மனம் சிந்திக்க அன்று எனக்கு அடிக்கடி சிறுநீர் வர ஒரு பயம் எங்கே சர்க்கரை நோய் இருக்குமோ என்று?
சிறு நீரை அடக்க ஆரம்பித்தேன், அது தான் வழி என்று யோசித்துக் கொண்டு..
மற்று மொரு மனம் அதிகமாக சிறுநீரை அடக்கினால் சிறுநீரகக் கல் உருவாகுமோ என்று எண்ண ..அன்று நான் பயணித்த வண்டி ஏ சி வசதி உள்ள வண்டி என்று யாரோ சொல்ல சில நேரம் நிம்மதி
.
பயணம் முடிந்தபின் ஒரு அரங்கத்தில் விழாவில் பங்கேற்க வேண்டும். ஓரே கூட்டம் அடைக்கப்பட்ட அரங்கத்திலும் மூச்சுமுட்டுவது போல உணர்ந்தேன்.எவ்வளவு வேகத்தில் வெளியே வர வேண்டுமோ அவ்வளவு வேகத்தில் வெளியே வந்தேன்.
இப்படி ஒன்று மற்றொன்றுக்கு ஆரம்பமாக மாற, அது ஏதோ வகையில் ஏதோ ஒன்றுக்கு முடிவாக , பயம் என்னோடு பயணித்துக் கொண்டே வந்தது.
நான் ஒரு விஷயத்தை எண்ணி பயம் கொள்கிறேன் என்கிற எண்ணம் தோன்றிவிட்டால் எனக்கு அது பயம் தராது.
நம் வாழ்வின் தேவைகளுக்கும், அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கும் பயம் காரணமாகவும் அதே சமயம் அதற்கு தடையாகவும் அதே பயம்தான் காரணம் இருக்கிறது.
இப்படி சாதாரணமான நாளில் , என்னுள் இத்தனை பயம் எனக்கு வாழ்க்கையில் வரஇருக்கும் முக்கியமான தருணங்களில் ஏற்படும் குழப்பம், பயம் என்னை எந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு நம்பிக்கை
இத்தனை பயம் என்னிடம் படையெடுக்க நான் ஒவ்வொருமுறையும் அதனுடன் போராடுவது தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது தவிர ஒவ்வொரு முறையும் நான் ஒன்றுடன் வெற்றி பெற்று தான் அடுத்த பயத்துடன் போராடவே செல்கிறேன் என்பதை பல சமயங்களில் மறந்து விடுவதால் நான் பயந்தவன் ஆகிறேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன். நான் பயங்கொள்பவன் என்று சொல்வதில் நான் கூச்சப்படுவதில்லை. பயங்கொண்டுருப்பவன் என்று சொல்வதை விட பயங்களைக்கொண்டு இருந்தவன் என்று சொல்ல நினைப்பவன்.
சில சமயங்களில் நான் அச்சமில்லாமல் அலட்டிகொள்பவர்கள் செய்ய மறுக்கவோ அல்ல
செய்ய பயப்படும் செயல்களை நான் என் பயமின்றி செய்துகொண்டிருந்தேன். பயம் என் மன உறுதி வென்ரிருப்பின் நான் அதனை செய்து முடித்திருக்க முடியாது.
இதனை உணர ஆரம்பிக்கும் வேலையில் பெரும்பான்மையினரிடம் வேறுபட்டு இருந்திருந்த காலங்களை மறந்ததினலோ என்னவோ என்னை நான் பயந்தவனாகவே அடையாளப்படுத்திக் கொண்டேன்.
பயம் சில நேரங்களில் எனக்கு சவால்களை உருவாக்குகிறது. பயம் இப்பொழுது வேறு பேராக எனக்கு பரிச்சயப் படுகிறது. கவனம், புத்திக்கூர்மை, அலட்சியமிண்மை இப்படியோ எத்தனையோ வார்த்தைகளில் சொல்லலாம்.
இந்த எண்ணம் தோண்றியபின் எந்த விதமான பயத்திலும் நான் வெகுநாள் உழன்றுகொண்டுருப்பதில்லை. அதற்காக நான் தைரியசாலியாக மாறிவிட்டேன் என்று சொல்ல வில்லை. இந்த பயத்திற்கு வேறு பெயர்கள் வைக்க கற்றுக் கொண்டதனால் அதனால் ஏனோ மனம் பதைபதில்லை".
இவ்வாறு அவன் பயத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதி முடிக்க, டக் டக் என்று சத்தம் கேட்க தன் அப்பாவோ என்று ஒலித்து வைத்தான்.
அவனது அப்பாவுக்கு இந்த எழுத்தாளர்களையும் பிடிக்காது, எழுத்தும் பிடிக்காது. இவன் இப்படி எழுதுவது அவருக்கு தெரிந்தால் தன்னை 'தொலைச்சு கட்டிடுவார்'ன்னு வேகமாக செயல்பட்டான்.
எல்லாம் ஒளித்துவைத்தபின், வாசலை பார்த்து இருக்கையில், இவன் சகோதரன் வர, அதுவரை தான் எழுதிய எந்த ஒரு பயமும் தனக்கு இல்லை என்று மெத்தனசெரிக்கில் இருந்திருக்க தனக்கு இருக்கும் ஒரே பயம் தன் தந்தையிடம் தான் என்று உணர , அவ்வளவு நேரம் அவ்வளவு தடவை எழுதிய பயம், அச்சம் என்ற சொற்களுக்கு ஊசி குற்றியது போல ஒரு பொருள் விளங்கியது.
வந்த சகோதரன் என்னடா ஒரு மாதிரி இருக்க என்று விசாரிக்க ,
"ஒண்ணுமில்லை டா"ன்னு அசடு வழிந்தான்.